மனிதன்

உலகமெனும் ஏட்டில் எனக்கான பக்கம்.

Monday, December 25, 2006

6. என்ன காதலோ?.

இது முதல் முறையாக ஏற்படுவது இல்லை,பழக்கமானதுதான், என்றாலும் ஏனோ ஜீரனிக்கவே முடியவில்லை. எனக்கு சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வாழ்க்கையில் ரொம்ப லேட்டாகத்தான் உருவானது (எனது இருபத்தி மூன்றாவது வயதில்).ஆனால் அப்படி ஒரு முடிவெடுத்தவுடன் குருவைத் தேடி அதிக சிரமப்படவில்லை.எனது பக்கத்து வீட்டு அக்காவே சங்கீதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மாயாமாளவகவுளை-இல் நான் தத்தித்தடுமாறிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள்,எனது சங்கீத குரு நாளையிலிருந்து வகுப்பு கிடையாது என்று சொல்லிவிட்டார். SPB ஆகும் எனது கனவு கலைந்து போன அதிர்ச்சியில், நான் ஏன் என்று கேட்டேன்.நாளை எனது திருமணம் என்று கூறினார்.

என்னக்கா இது ஒரு பத்திரிக்கை இல்லை, வீட்டில கல்யாணச் சுவடே தெரியவில்லை என்று கேட்ட பிறகுதான், முழுவிவரங்களும் தெரிய வந்தது.அது காதல் திருமணம்.

அக்கா தேவர் இனத்தை சேர்ந்தவர்.அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் அந்தனர்.அதுவும் இல்லாமல் அக்காவின் குடும்பம் பகுத்தறிவு கொள்கையில் ஊறிய குடும்பம்.அதனால் அக்காவின் குடும்பத்தில் ஒரு கொதிப்பான சூழ்நிலை நிலவி வந்தது. அக்கா என்னிடம் அவசியம் திருமணத்திற்கு வரவேண்டும் என்று சொல்லியிருந்ததால், மறு நாள் காலை அடித்துப் பிடித்து போய் சேர்ந்தேன்.

திருமணம் முடிந்தது. பெண் வீடு மற்றும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாருமே வரவில்லை.வந்திருந்த அத்தனைபேரும் நண்பர்கள்.ஏன் இப்படி என்று இன்னும் தீவிர விசாரனையில் தெரிய வந்த இன்னொரு உண்மைதான், எனது முதல் அஜீரனக் கோளாறு. அது அக்காவைவிட அவரது கணவர் இரண்டு வருடம் இளையவர்.

இரண்டாவது அஜீரனக்கோளாறு - சச்சின் டெண்டுல்கரைவிட அவரது மனைவி அஞ்சலி ஐந்து வருடம் பெரியவர்.

மூன்றாவது அஜீரனக்கோளாறு - தனுஷைவிட ஐஸ்வர்யா இரண்டு வயது பெரியவர்.

நான்காவது கோளாறு - ஐஸ்வர்யாராயைவிட அபிஷேக்பச்சன் இரண்டு வயது இளையவர்.

காதல் உயர்ந்த விஷயம்தான் இருந்தாலும் இந்தமாதிரியான கலாச்சாரக் கோளாறை என்னால் ஜீரனிக்கவே முடியவில்லை.

அன்புடன்,
ராமச்சந்திரன்.

Monday, December 11, 2006

5.ஜன்னு கதைகள்.

ஐயாமாரே! அம்மாமாரே! குழந்த மனம் கொண்ட மஹாஜனங்களே! தலைக்காய் முத்திப்போனவங்கள்ளாம்
ஜென் கதை பேசுவத கேட்டுருப்பீங்க. அத நினைச்சு இத படிக்காதிங்க. இது ஜன்னு கதைங்க. ஜன்னு கத சொல்லும் முன்பு, நம்ம ஹீரோ ஜன்னு பத்தி ஒரு அறிமுக உரைங்க.

இந்த ஹீரோவுக்கு, இப்ப வயசு ஆறு நடந்துகிட்டு இருக்குதுங்க. இவரோட ஒன்றரை வயசுலேந்து, இவரை தூங்க பன்ன, நான் அள்ளி வுட்ட கதைங்கதான் ஜன்னு கதை. இவரு வேற யாரும் இல்லைங்க, என்னோட சீமந்தப் புத்திரன்தான். கதைக்கு நடுவுல நிறைய பாடல் வருங்க. ஆனா எந்த இலக்கணத்துக்கும் கட்டுப்படாதுங்க.

கதையில வரும் எல்லா பாத்திரங்களும், பெரிய இசை ஞானிங்க ஆனால் சங்கீதம் எதுவும் படிச்சதில்ல. இதில் வரும் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை; வேனும்னு நினச்சா;வானமே எல்லை.

ஹீரோன்னா நண்பர்கள் இல்லாமலா?. நம்ம ஜன்னுவோட நண்பர்களா இப்போதைக்கு இருப்பவர்கள்.
1.நரசிம்மா லயன். 2.மீனாட்ச்சி பேரட்.3.நாகராஜ் பாம்பு.
4.கணேஷா ஆன. 5.கிட்டன் மியாவ். 6.பைரவ் டாக்.
7.முருகா மயில். 8.ரப்பர் ball.

இந்த நண்பர்கள் அத்தனபேரும், எப்பவும் நம்ம ஜன்னுவ சுத்தித்தான் இருப்பாங்க. சாப்புடரது, தூங்கரது, குளிக்கரது,
படிக்கரது, பாடரதுன்னு ஒரு கோஷ்டியாத்தான் சுத்திகிட்டுத் திரிவாங்க.

இப்போதைக்கு அறிமுகம் இவ்ளோதான். அடுத்து கதைக்கு போவோம். டன்டனக்கா......டன்....டனக்குனக்கா....டின்.
அன்புடன்,
ராமச்சந்திரன்.

Sunday, December 10, 2006

4.சிலைகள் உடைப்பு.

பெரியார் சிலை உடைப்புக்கு பதிலாக சாமி சிலைகளை உடைச்சாங்க. இது சரியா தப்பான்னு பேச நான் வரலை.இதற்கு பதிலடியாக சக மனிதர்கள் மேல் ஏன் பெட்ரோல் குண்டு வீசினார்கள்?. ஏன் வெட்டினார்கள்?.
இங்குதான் இருக்கு மனித மனதின் சூட்சுமம்.

ஒரு மனிதனின் நாகரீகம், அந்த மனிதன் கைக்கொள்ளும் வன்முறையின் அளவை பொறுத்துதான் அளவிடப்பட வேண்டும். என்ன? வன்முறைக்கு அளவா?. வன்முறையே கூடாது, என்று நினைப்பவர்களா நீங்கள்?. அப்படி ஒரு மனிதன் உங்களுக்கு தேடினாலும் கிடைக்க மாட்டான்.

ஏனென்றால் வன்முறையும் மனிதனின் இயல்பு குணங்களில் ஒன்றுதான். அதோட அளவை பொறுத்துதான், மனிதன் தீவிரவாதியா அல்லது சாதுவான்னு தெரிஞ்சிக்க முடியும்.

நிறைய சாதுக்களை கொண்ட சமூகம், நாகரீக சமூகம் அதற்கு எதிர்பதம் அநாகரீக சமூகம். இந்த சிலை இடிப்பு விஷயத்தில் ரெண்டு தரப்புமே அநாகரீகமா நடந்திருந்தாலும், எனது கண்டனம் பெரிய அளவில் வன்முறையை கைக்கொண்ட திராவிடர் கழகத்தினர் மீதுதான்.
அன்புடன்,
ராமச்சந்திரன்.

3.பச்சைக் கிளிகள் பத்தொன்பது.

நான் வாழ்வில் இதுவரை கண்டிராத ஒரு புதிய காட்சியை இன்று கண்டேன். சூரியன், தான் வெளிப்படும் முன், தன் கிரணங்களை அனுப்பி உயிரினங்களை உசுப்பும் சந்தியா வேலையில், வீட்டின் அருகாமையில் உள்ள சாயா கடையில் வாங்கிய, ஏலக்காய் பொடி தூவிய ஒரு சாயாவை கையில் பிடித்தபடி, பக்கத்து கடை படிக்கட்டில் அமர்ந்துகொண்டு, குளிர்ந்த தென்றல் காற்று உடல் வருடிச் செல்ல, கொஞ்சம் தேனீர் நிரம்ப வானம் என்ற வரிகள் மனதில் ஓட, வானத்தை அன்னாந்து பார்த்தபடி டீ குடித்துக்கொண்டிருந்த நேரத்தில், வானத்தில் கீக் கீக் கீக்
என்று கத்தியபடியே கூட்டமாக கிளிகள் பறப்பதை கண்டேன்.

இதில் விஷேஷம் என்னவென்றால், பறந்த கிளிகளின் எண்ணிக்கை ஒரு இருபதாவது இருக்கும். ஒரு பத்து வினாடி இடைவெளியில் இதேபோன்று, இன்னோரு கூட்டம் பறக்க கண்டேன்; இந்த முறை ஒரு முப்பது இருக்கும். வாழ்வில் முதல் முறையாக இத்தனை பச்சைக் கிளிகள் ஒன்றாக பறப்பதைக் கண்டேன்.

இந்த காட்சியை கண்டபின் வீடு திரும்பும் நேரத்தில், அருகில் உள்ள மசூதியின் உயர்ந்த மினாரை தொட்டு விடுமோ என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு தாழ்வான உயரத்தில் பறந்த விமானத்தைக் கண்டதும் ஒரு புதிய காட்சி.

ஒவ்வொருநாளும், ஒவ்வொரு காட்சியும் நமது வாழ்வில் புதியனதானே.
அன்புடன்,
ராமச்சந்திரன்.